31 July 2004

விசும்பின் துளி பசும்புல் தலை


கருத்த மேகங்கள் பொழிகின்ற மழைநீர் இல்லாவிட்டால் பூமியில் பசும்புல்லும் தலைகாட்டாது.
ஆனால் விளை நிலங்களை வீடுகளாக மாற்றுவதில் நாம் காட்டும் வேகத்தால் இன்று மழை பொழியும் மேகங்களைத் தேடவேண்டியுள்ளது.

30 July 2004

காசியில்


ஒரு பழம்பெரும் ஆன்மிக நகர் இன்று அழுக்கு நகராகிவிட்டது.
நிலம், நீர், காற்று எல்லாமே அசுத்தம்.
இங்கேயும் மனிதர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

29 July 2004

சேதி சொல்லும் பூ


கண்ணைக் கவரும் வண்ணப்பூ
மஞ்சள் நிறத்து வெண்டைப்பூ;
பாப்பாவைப் பார்த்து சிரிக்குது
வா வா என்றே அழைக்குது;
அருகில் சென்று கேட்டால்
அழகாய் சிரித்து சொல்லுது:
'எனக்கும் மேலே உள்ளது மொக்கு
செடியில் கீழே உள்ளது பிஞ்சு,
இலைகள் தண்டு எல்லாத்துக்கும்
உயிரைத்தருவது மண்ணில் இருக்கும் வேரு.
அது போல
பாப்பா, பாப்பா மறக்காதே
மனித வாழ்வில் பல நிலைகள்
எல்லா நிலையிலும் உயிர்ப்பைத் தருவது
மனதில் நிலைக்கும் மாறா அன்பே.'

28 July 2004

பொங்கும் கடலோசை


மீண்டும் மாமல்லபுரம். இந்த இடம் புலிக்குகை உள்ள கடற்கரை.

விரிந்த வானமும் பரந்த கடலும் சொல்லும் கதைகள் பலப்பல. எழுப்பும் எண்ணங்கள் எண்ணற்றவை.
மலையும் மலை சார்ந்த பகுதியும் நம்முள் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் ஒருவகை. கடலும் கடல் சார்ந்த பகுதியும் ஏற்படுத்தும் தாக்கம் இன்னொரு வகை.

நிலப்பகுதிகளில் குறிஞ்சி, மருதம், நெய்தல் - இந்த வரிசையில் இவை எனக்குப் பிடிக்கும்.

27 July 2004

ஆவாரம்பூ

தமிழ் சினிமாப் பாடல்களில் அடிக்கடி தலை காட்டும் பூக்களில் ஆவாரம்பூவும் ஒன்று.
கேசியா ஆரிகுலேட்டா இதன் தாவரவியல் பெயர்.
இதன் வேர், இலை, பூ, காய், பட்டை, பிசின் ஆகிய எல்லாப் பகுதிகளும் மருத்துவப் பயனுள்ளவை.
தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் வளரும் அழகிய சிறுசெடி.
எனக்கு மிகவும் பிடித்த மலர்களுள் ஒன்று.

26 July 2004

மரமும் செடிகளும்

கோதையார் அணைக்கட்டுப்பகுதியில் இன்னொரு எழில்மிகு தோற்றம்.

செயற்கை சத்தங்களால்
பாழ்படாத இயற்கைவெளி.
சென்று பாருங்கள் -
இந்த பூமியின் இன்னொரு பக்கம்
உங்கள் இருபக்கமும்
பரந்து விரியும்.
திரும்பிவர மனமில்லாமல்
திரும்பினேன் இங்கிருந்து.

25 July 2004

இந்தியாவின் நுழைவாயில்

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகையைக் கொண்டாட 1911 இல் ஆரம்பித்து 1924 இல் திறக்கப்பட்ட இந்திய நுழைவாயிலும் 1903 இல் கட்டப்பட்ட தாஜ் ஓட்டலும்.
அருகில் உள்ள தாஜ் டவர் 1973 இல் கட்டப்பட்டது.

இந்த நுழைவாயில் வழியாகத்தான் ஆங்கிலேயரின் கடைசிப் படை 1948 பிப்ரவரி 28 இல் இந்தியாவைவிட்டு வெளியேறியது.


24 July 2004

முள்ளும் மலரும்

முள்ளும் மலருமா?
முள்ளும் மலரும் - ஆ?

21 July 2004

குன்றிருக்கும் இடமெல்லாம்

மலைகள் என் மனம் கவர்ந்தவை. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சமவெளிப் பகுதி. 50 கி.மீ மேற்கே சென்றால் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர். 40 கி.மீ. கிழக்கே சென்றால் வங்கக்கடல். ஆனால் 15 வயதுக்குப் பிறகுதான் இவற்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது முதல் மலையுச்சிகள் என்னை மயக்குகின்றன; கடலலைகள் கனவு காண வைக்கின்றன. இயற்கையோடு ஒன்றியிருக்கும் நேரங்களில் நான் என்னை அறிகிறேன். வாழ்க்கையை உணர்கிறேன்.

அப்படி ஒன்றியிருந்த ஒரு நாளில் ( கோதையாறு அணைக்கட்டுக்கு அருகே)

20 July 2004

தேயிலைத் தோட்டம்

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஒரு தேயிலைத்தோட்டத்தில் மனங்கவர் காட்சி. இத்தோட்டங்களில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்த்தபோது மனம் கவரவில்லை; கனத்தது. "பால்மரக் காட்டினிலே" படித்திருக்கிறீர்களா? நான் இங்கு பார்த்தேன்.

19 July 2004

ஏரிக்கரையோரம்

ஊர் சுற்றக்கிளம்பினால் முதலில் நான் பேக் செய்யும் பொருள் காமிராதான். திருமணமான புதிதில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் ஒவ்வொரு ஊராக அலை(ள)ந்த போது எடுத்த படங்களுள் ஒன்று.

18 July 2004

கம்பீரம் = விக்டோரியா மெமோரியல்

கொல்கத்தா விக்டோரியா நினைவுச் சின்னத்தின் வானுயர்ந்த கம்பீரம் என்னை முதல் சந்திப்பிலேயே காதல் கொள்ள வைத்தது. வெண் பளிங்கில் இழைத்து கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல முடியாத ஒரு ஆங்கிலேய படைப்பு.


16 July 2004

கை புனைந்தியற்றும் கவின் பெறு வனப்பு

கொல்கத்தா தாவரவியல் பூங்காவில் இயற்கை அழகை தனது தூரிகையின் துணையால் படம் பிடித்தவரை காமிராவில் பிடித்தேன்.

15 July 2004

பனிக்குரங்கு

இதுவும் மாமல்லபுரத்தில் எடுத்த படம்தான். குச்சி ஐஸ்ஸை தின்றுகொண்டிருந்த ஒரு குழந்தையிடமிருந்து பறித்து ஆவலுடன் ருசித்து சாப்பிடும் குரங்கு. மாமல்லபுர குன்றுகளில் குரங்குகளின் அட்டகாசம் கொஞ்சம் அதிகம். அசந்தால் காமிராவைக்கூட பறித்து படம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் நம் முன்னோர்கள் :)

14 July 2004

தேனீ = சுறுசுறுப்பு

இன்று காலை பூக்களை மொய்த்துக் கொண்டிருந்த ஒரு தேனீயை நெருக்கத்தில் படம் பிடிக்க அரைமணி நேரம் போராடினேன். சுட்டுத்தள்ளிய பல படங்களில் எனக்குப் பிடித்தவை இவை இரண்டும்.
ஓயாத உழைப்பு
honeybee03a

கருமமே கண்ணாக
honeybee02a

13 July 2004

சிங்கப்பூரில் ஒரு சிகரெட் குவியல்

புகைத்த நிம்மதியில் நசுக்கிப்போட்ட
மனிதர்களை
கசக்கிப்போட்ட மகிழ்ச்சியில்
குவிந்து கிடக்கும் நச்சுத்துண்டுகள்.
இவை எரித்த இதயங்கள் எந்தனையோ!
sing_cig
சொர்க்கபுரியில் நரகத்தின் நுழைவாயில்

12 July 2004

அல்லி குளம்

மூணாறு அருகே இருக்கும் ஒரு நீர் நிலையில் எடுத்த படம்.

11 July 2004

செவ்வானம் தந்த சில்-அவுட்

இயற்கையை ரசித்த ஒரு ஏகாந்த வேளையில்

10 July 2004

உயர்ந்த மரமும் வளரும் கன்றும்

எட்டயபுரம் தூத்துக்குடி சாலையில் பயணம் செய்த ஒரு அந்திமாலைப் பொழுதில் எடுத்த நிழற்படம்.

09 July 2004

துக்கத்தை மறக்கும் தூக்கம்

நடைபாதை கட்டாந்தரையில் தன்னைக் கிடத்தி, இடுப்பு வேட்டியை இதமாய்ப் போர்த்தி, விழிப்பு நிலை தரும் சோகத்தை மறந்து இந்த மனிதர் சுகமாய் உறங்குவது வேலை செய்த களைப்பிலா? வேலை இல்லாத அலுப்பிலா?


08 July 2004

கல்லிலே ருசிப்பதென்ன?

மாமல்லபுரம் குன்றுகளில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த போது கண்ணில் சிக்கிய காட்சி காமிராவில் பதிந்தது.

07 July 2004

குவாலியர் கோட்டையில்

தேலி கா மந்திர்

எண்ணைகாரன் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் குவாலியர் கோட்டையில் உள்ள கோயில்களுள் பழமையானது என்று கருதப்படுகிறது. எந்த கட்டடக்கலையைச் சேர்ந்தது என்று இனம் பிரிக்கமுடியாத, ஒரு கலந்துகட்டிய சமத்துவ புரக் கோயில். வயது : 1000 ஆண்டுகளுக்கு மேல். தனித்து நிற்கும் இந்த கட்டடத்தின் அருமை நேரில் பார்த்தால் அதிகமாகத் தெரியும்.


மாமியார் மருமகள் கோயில்

இதுவும் குவாலியர் கோட்டையில் உள்ள இரட்டைக் கோயில்களில் ஒன்று. தரமான கற்களில் செதுக்கப்பட்ட நேர்த்தியான வேலைப்பாடுகள் வியக்கவைப்பவை. இந்த கோயிலுக்கு ஏன் இந்த பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு?

06 July 2004

நினைவுச் சின்னம்

ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன் எங்களூருக்குப் பக்கத்தில் வாழ்ந்தவரின் வீடு இருந்த இடம் இப்போது:
viidu

அவர் இன்னொருவருக்கு கட்டிய வீட்டின் முகப்பு பத்து ஆண்டுகளுக்கு முன் இப்படி இருந்தது:
gkcentrance

அந்த வீடு இப்போது யுனெஸ்கோ உலக கலாச்சார நினைவுச் சின்னமாகி உள்ளது. இந்திய தொல்பொருள் துறை சிறப்பாக நிர்வகிக்கும் இடங்களில் ஒன்றாக மாறியுள்ள அந்த கோயில்
gkctemple


இருக்கும் ஊர்: கங்கை கொண்ட சோழபுரம்
கட்டியவர்: முதலாம் இராசேந்திர சோழன்

05 July 2004

தொட்டாசிணுங்கி - 2001

தொட்டது 2001 இல்

(தாவரவியல் பெயர்: மிமோசா புதிகா)
தொடுவதற்கு முன்:
thottaa_sinungi_new
சிணுங்கிய பின்